செங்கல்பட்டு: 27 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இறுதி பட்டியல் வெளியீடு!

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 27,47,550 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டார். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,90,958 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சுருக்கு முறை திருத்தம் 2025 பணிகள் நடைபெற்று கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதங்களில் நான்கு சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்கு சாவடிகளிலும் நடைபெற்று நீக்கல் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் குறித்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 98,701 படிவங்கள் பெறப்பட்டது. இதில் 97,444 படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று திங்கட்கிழமை (ஜனவரி 6) வெளியிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார் ஆட்சியர் (பயிற்சி) மாலதி ஹெலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் அமீது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்கள் 13, 57, 923. பெண்கள் 13, 89, 146. இதரர் 481 என மொத்தம் 27, 47, 550 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6, 90, 958 வாக்காளர்கள் இருக்கின்றனர். 18-19 வயதுடையோர் 37,749 வாக்காளர்கள் உள்ளனர்.

இதையடுத்து புதிய வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் வருவாய் கோட்ட அலுவலகங்கள் வட்டாட்சியர் மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். மேலும் தொடர் திருத்தம் நடைபெறுவதால் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொகுதிகள் விவரம்:

1. சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் 3,45,184 ஆண் வாக்காளர்களும் , 3,45,645 பெண் வாக்காளர்களும், 129 இதர வாக்காளர்கள் என 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர்.

2. பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதியில் 2,18,573 ஆண் வாக்காளர்களும் , 2,21,859 பெண் வாக்காளர்களும், 45 இதர வாக்காளர்கள் என 4,40,477 வாக்காளர்கள் உள்ளனர்.

3. தாம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் 2,03,675 ஆண் வாக்காளர்களும் , 2,07,481 பெண் வாக்காளர்களும், 71 இதர வாக்காளர்கள் என 4,11,227 வாக்காளர்கள் உள்ளனர்.

4. செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியில் 2,13,950 ஆண் வாக்காளர்களும் , 2,22,125 பெண் வாக்காளர்களும், 66 இதர வாக்காளர்கள் என 4,36,141 வாக்காளர்கள் உள்ளனர்.

5. திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் 1,53,425 ஆண் வாக்காளர்களும் , 1,59,458 பெண் வாக்காளர்களும், 56 இதர வாக்காளர்கள் என 3,12,939 வாக்காளர்கள் உள்ளனர்.

6. செய்யூர்(SC) சட்டப்பேரவை தொகுதியில் 1,10,931 ஆண் வாக்காளர்களும் , 1,15,219 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்கள் என 2,26,173 வாக்காளர்கள் உள்ளனர்.

7. மதுராந்தகம்(SC) சட்டப்பேரவை தொகுதியில் 1,12,185 ஆண் வாக்காளர்களும் , 1,17,359 பெண் வாக்காளர்களும், 91 இதர வாக்காளர்கள் என 2,29,635 வாக்காளர்கள் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE