ஆளுநரின் செயல் தமிழக மக்களை இழிவுபடுத்தக்கூடியது: முத்தரசன் கண்டனம்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்:

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழக சட்டப்பேரவை என்பது தமிழக மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கக் கூடியது. இங்கு ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அரசின் கொள்கை விளக்க குறிப்பான ஆளுநர் உரையை படிப்பது அவரது கடமை. சட்டப்பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவடையும் போது, தேசிய கீதம் பாடப்படுவது தான் சட்டப்பேரவையில் மரபு.

ஆளுநர் கலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே சட்டப்பேரவைக்கு வருகிறார். கடந்த முறை அறிக்கையை முழுமையாக படிக்காமல், இல்லாததை சேர்த்து வாசித்தார். ஆனால் இந்த முறை ஆளுநர் உரையை படிக்காமல், தேசிய கீதம் பாடவில்லை என தேவையில்லாத கருத்தை சொல்லி, தான் நியாயமாக நடந்து கொள்வது போன்ற தோற்றத்தை உருவாக்கி ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

அதன்பின் ஆளுநர் சமூக ஊடகப் பதிவில், தேசிய கீதம் பாடுமாறு முதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் வலியுறுத்தினேன் அதை அவர்கள் ஏற்காததால் வெளிநடப்பு செய்தேன் என பதிவிட்டு, சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார். அவரது கருத்து உண்மையாக இருந்தால் அதை ஏன் நீக்க வேண்டும். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்னர் ஆளுநர் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் இன்னும் சில அமைச்சர்களை சந்தித்து விட்டு, தமிழகம் வந்து கலகத்தை செய்து இருக்கிறார். ஆளுநர் பதவி என்பது ஒழிக்கப்பட வேண்டிய பதவி.

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஆளுநர் பதவி. கடந்த காலங்களில் ஆளுநர் பதவி என்பது தேவையானதாக இருந்திருந்தாலும் கூட இன்று அது தேவையில்லை. தனது பதவிக்காலம் முடிந்த பின்னரும் தமிழக ஆளுநர் பதவியில் நீடிப்பதன் மர்மம் தெரியவில்லை. ஆளுநரின் இந்த செயல் தமிழக சட்டப்பேரவையை மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களையும் இழிவுபடுத்தும் செயல்.

தமிழக ஆளுநரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிக மிக வன்மையாக கண்டிக்கிறது. இந்த கூட்டத் தொடரில் வேங்கை வயல் விவகாரம், அண்ணா பல்கலை. விவகாரம், மின்கட்டண உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-விற்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், அவர்களும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு யார் அந்த சார், யார் அந்த மோர் என்பது குறித்தும், அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்தும் விவாதிக்கலாம்.

ஆனால் அதை செய்யாமல் விளம்பரம் தேடும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபடுகிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக கெட்டுப் போய்விட்டது ஆகவே ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு இந்த விவகாரங்களை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். உண்மையில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கிற நல்ல நோக்கம் அவர்களிடம் இல்லை" என்று முத்தரசன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE