சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை எனவும் முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
» பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்: செல்வப்பெருந்தகை புகார்
» சட்டப்பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு - அண்ணா பல்கலை. விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!
கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாரயம் தயாரிப்பு மற்றும் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக நீதிபதிகள் கூறினர். மது விலக்கு பிரிவு போலீசார் பல தவறுகளை செய்வதாகவும் அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என கூறினார்.
இதனையடுத்து, மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அனைவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.