ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சண்முகம் ஆவேசம்

By KU BUREAU

சென்னை: ஆர்என் ரவி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். அத்தகைய முடிவை ஆளுநர் எடுக்காவிட்டால் மத்திய அரசு அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கும் அவரை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது என்பது கடந்த கால மரபு அடிப்படையில் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று. இந்த சட்டப்பூர்வமான கடமையை நிறைவேற்றாமல் இன்று ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் இசைப்பதும் தான் மரபு. இந்த மரபை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை காலங்காலமாக பின்பற்றி வருகிறது. இந்த மரபுகளை மதிக்காமலும், ஆளுநருக்கு உள்ள கடமைகளை நிறைவேற்றாமலும் மத்திய பாஜக அரசு விரும்புகிற படி நடந்து கொள்வதை ஆளுநர் ஆர்என் ரவி வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த காலங்களிலும் இதேபோல் அவர் சட்டமன்றத்திலிருந்து தொடர்ந்து அரசியல் உள்நோக்கத்துடன் வெளிநடப்பு செய்து வந்துள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள்.

எனவே, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகவும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். அத்தகைய முடிவை ஆளுநர் எடுக்காவிட்டால் மத்திய அரசு அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கும் அவரை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்று சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவான கண்டனக் குரலெப்பிட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது’ என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE