எல்லோருக்குமான தலைவராக முதல்வர் இல்லை: அர்ஜுன் சம்பத் கருத்து

By KU BUREAU

மதுரை: எல்லோருக்குமான அரசு எனக்கூறும் முதல்வர் எல்லோருக்குமான தலைவராக இல்லை என இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், சனாதன தர்மம், இந்து ஆலயங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளில் பெரியார் தீவிரமாக இருந்த காலத்தில் அவரிடம் அரசியல் பயின்ற அண்ணா, பெரியாரின் கருத்தில் இருந்து மாறுபட்டு திமுகவை நடத்தினார். அண்ணாவின் வழியை கருணாநிதியும் பின்பற்றினார். கருணாநிதி ராமானுஜ காவியம் இயற்றினார். அண்ணாவும், கருணாநிதியும் திமுகவில் பிராமணர்களை சேர்த்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு மாறாக நடந்துகொள்கிறார். எல்லோருக்குமான அரசு எனக்கூறும் முதல்வர் எல்லோருக்குமான தலைவராக இல்லை. பிராமணர்களின் கோரிக்கை தொடர்பாக நேரில் சந்தித்து மனு கொடுக்க நேரம் கேட்டும் முதல்வர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.

பிராமணர்களின் கோரிக்கையை முதல்வர் ஏற்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ஒரு சமூகத்தை இழிவாகப் பேசும்போது எப்படி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அதேபோல் பிராமணர்களை அவதூறாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது:

தேசிய சிந்தனை உள்ளவர்களை தேச விரோதிகளுக்கு பிடிக்காது. பிரதமர் மோடி அனைவரின் மேம்பாட்டுக்காக உழைக்கிறார். இதை திராவிட அரசு ஏற்க மறுக்கிறது. இந்தியாவால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்றார்கள். ஆனால் இந்தியா நூறு செயற்கை கோள்களை ஏவியுள்ளது. வளர்ந்த நாடுகள் என்று சொல்லும் ஜெர்மனி, இத்தாலிக்குக்கூட செயற்கைக் கோள் அனுப்ப உதவியது இந்தியா தான். இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கங்கள் பஞ்சாப் மாநிலத்தைவிட அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் அனைத்து சமுதாயங்களும் காப்பாற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட சமுதாயத்தினரை பாதுகாக்க பிசிஆர் சட்டம் உள்ளது போல் பிராமண சமுதாயத்துக்கும் பாதுகாப்புச் சட்டம் தேவை, என்றார்.

தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE