நீலகிரி தோடர் பழங்குடியினரின் ‘மொற்பர்த்’ பண்டிகை கோலாகலம்

By KU BUREAU

உதகை: உதகை அருகே முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியின மக்கள் சார்பில் ‘மொற்பர்த்’ என்ற புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், காட்டுநாயக்கர், பனியர், இருளர், குறும்பர் இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ ‘மொற்பர்த்’ எனப்படும் புத்தாண்டை தோடரின மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

இந்தாண்டுக்கான பண்டிகை, தலைமை மந்தான தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்துகொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமைவாய்ந்த ‘மூன் போ’ மற்றும் ‘அடையாள் ஓவ்’ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் வளாகத்துக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளதால், தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து மண்டியிட்டு வழிபாடு நடத்தினர்.

ஆண்கள் வழிபாடு முடிந்ததும், பெண்கள் கொண்டாட்டத்தில் இணைந்தனர். தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடியபடி நடனமாடினர். இளைஞர்கள் இளவட்டக் கல்லை தூக்கி, தங்கள் வீரத்தை நிரூபித்தனர்.

பால், நெய், இனிப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக உணவு, விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதன்பின், பெண்கள் வரிசையாக வந்து முதியவர்களின் பாதங்களை தொட்டு வணங்க, தங்கள் முறைப்படி வலது காலை தூக்கி அந்த பெண்களின் தலை மீது வைத்து ஆசிர்வாதம் செய்தனர். இந்த விழாவில் தோடரின மக்களின் தலைவர் மந்தேஸ் குட்டன், அடையாள்குட்டன், பீட்ராஜ், நார்தே குட்டன் உட்பட தோடரின நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE