உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா? - தமிழக பாஜக கண்டனம்

By துரை விஜயராஜ்

சென்னை: “உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா?” என கேள்வி எழுப்பி தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிந்து சமவெளி நாகரிகம் குறித்தும், தமிழர்தம் பெருமையை போற்றும் கீழடி நாகரீகத்தை குறித்தும் பெருமையோடு பேச வேண்டிய கருத்தரங்கில், சம்பந்தமே இல்லாமல், தமிழகத்தில் இனவாதத்தையும், பிரிவினை வாதத்தையும், மதவாதத்தையும் ஊக்குவித்து, ஊழல் இனத்திற்கு இலக்கணமாக விளங்கும் திமுக அரசு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமையோடு பேசுவது வியப்பையும் வருத்தத்தையும் தருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமரும் போதெல்லாம் வரலாற்றைத் திருத்திப் பேசுவதும், தங்கள் கட்சிக்கு இல்லாத பெருமையை, தங்கள் ஆட்சி செய்யாத செயல்களை எல்லாம் செய்தது போல பொய் பேசி மாணவர்களையும், இளைஞர்களையும், சமுதாயத்தையும் ஏமாற்றி வருவது இன்றளவும் தொடர்ந்து வருவது தமிழகத்துக்கு ஆபத்தானது.

‘தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பிரகடனம் செய்துவிட்டீர்களா?’ என்று துணிச்சலுடன் கேள்வி கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘பின்விளைவுகள் ஏற்படும்’ என்ற முரசொலியின் மிரட்டலுக்கு பயப்படாமல், மீண்டும் மீண்டும் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா? முதல்வரும், முரசொலியும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் தவறுகளை, ‘யார் அவர்?’ என்று தமிழகமே பொங்கி எழுந்து கேள்வி கேட்டு போராட்டக்களமாக மாறிவிட்ட சூழ்நிலையில் கூட, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கருத்துக்களை தெரிவிக்காமல், களத்தில் இறங்கி போராடாமல் தமிழக நடிகர், நடிகைகள் வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE