சென்னை: பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் எனவும், திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன் படி அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும். 2012 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாகவும் பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் உள்ளதற்கு தேமுதிக கண்டிக்கிறது. 13 ஆண்டுகளாக பணிபுரிகின்ற பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த முறையாவது பொங்கல் போனஸ் வழங்கத் தமிழக முதல்வரை தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன்.
இந்த பொங்கல் போனஸ் தொகையைத் தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து தான் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அதனைத் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி கற்பித்துத் தருகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கப் பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சர் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கை விட்டதால் தான் ஒருமுறைகூட போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்ற முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்குப் பொங்கல் போனஸ் கிடைக்கும் போது, அதைப் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கச் செய்வது தான் நியாயம் ஆகும். தற்போது ₹12,500 ரூபாய் சம்பளம் தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. குறைந்த சம்பளம் இந்த காலத்தில் போதுமா என்பதைத் தமிழக முதல்வர் அவர்கள் நினைத்துப் பார்த்து, பகுதிநேர ஆசிரியர்களுக்குத் தேர்தலின் போது கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
» சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: வெடித்தது சர்ச்சை!
» சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
மேலும் தொகுப்பூதியம் முறையை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் தான் தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். எனவே பொங்கல் போனஸ் வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கத் தமிழக அரசை தேமுதிக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்