நேற்று முன்தினம் வரை இந்த ஆட்சியை புகழ்ந்தவர்தான் கே.பாலகிருஷ்ணன்: அமைச்சர் சேகர்பாபு பதில்!

By KU BUREAU

சென்னை: நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் கே.பாலகிருஷ்ணன். அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டுதான், அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும் என தமிழக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். நான் முதல்வரை கேட்க விரும்புகிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. எப்படி தமிழகத்தில் காவல்துறை இதுபோல கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது? தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தக்கூடாதா? மக்கள் இயக்கங்கள் நடத்தக்கூடாதா? பாதிக்கப்படும் மனிதன் தன் உரிமைக்காக போராடக்கூடாதா?. ஆர்ப்பாட்டம் நடத்தினால், கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?” எனத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இந்த கருத்து தொடர்பாக இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, “நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் கே.பாலகிருஷ்ணன். மகளிர் உரிமை திட்டம் என்றாலும் சரி, விடியல் பயணம் என்றாலும் சரி, புதுமைப்பெண் திட்டம் என்றாலும் சரி முதல்வருடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் புகழ்ந்தவர். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டுதான், அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும்.

அதேநேரம், எங்களைப் பொறுத்த அளவில் ஜனநாயகப்படி போராடுவதற்கு உரிமை கோருவோருக்கு, எங்களால் முடிந்த அளவிற்கு மறுப்பதில்லை. மக்களுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களை எடுத்துப் பார்த்தால் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடியவர்களுக்கு அனுமதி தந்தது போல் வேறு எந்த ஆட்சியிலும் அனுமதி தரப்படவில்லை.

அதேபோல எந்தவொரு கோரிக்கைக்காக போராட்டம் நடந்தாலும், உடனே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை அனுப்பி பேசி அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோடு கலந்து பேசி உடனடியாக அதற்கு நிவாரணம் காணும் அரசாகவும் இந்த அரசு இருந்து கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் என்று வருகின்ற பொழுது மக்களுடைய சராசரி வாழ்வு, தினசரி வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்பது திமுக ஆட்சியின் எண்ணம்.

மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருப்பதில்லை. அவர்கள்மீது எந்தவிதமான அடக்குமுறைகளோ பயன்படுத்தப்படுவதில்லை. முறையாக வழக்கு பதிந்து அவர்களை மாலைக்குள்ளாக விடுதலை செய்கிறது காவல்துறை. இது சட்டத்தின் ஆட்சி.

பாலகிருஷ்ணன் நேற்று வரை இந்த ஆட்சியை புகழ்ந்து கொண்டிருந்தவர். வருங்காலங்களில் அவர் புகழ்கின்ற அளவிற்கு அவருடைய தேவைகளை நிச்சயமாக செவிசாய்த்து இந்த ஆட்சி நிறைவேற்றும். எல்லோருக்கும் எல்லாம் என்று கூறும் முதல்வர், நிச்சயமாக இப்பிரச்சினையையும் களைவார். மற்றபடி குற்றம்சாட்ட வேண்டும் என்றே குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE