மாணவி பாலியல் வன்கொடுமை: மதுரையில் யாத்திரை செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் 300 பேர் கைது

By KU BUREAU

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு நீதி கேட்டு மதுரையில் தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி உட்பட 300-க்கும் மேற்பட்ட பாஜக மகளிரணியினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மதுரையில் உள்ள செல்லத்தம்மன் (கண்ணகி) கோயிலில் நேற்று யாத்திரையை தொடங்க திட்டமிட்டனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், தடையை மீறி பாஜக மகளிரணியினர் நேற்று யாத்திரையை தொடங்க கோயில் முன் திரண்டனர். பாஜக மாநில மகளிரணி தலைவர் உமாரவி தலைமை வகித்தார்.

கையில் சிலம்பை ஏந்தியபடி, யாத்திரையை தொடங்கி வைத்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பேசியதாவது: விளம்பரத்துக்காக பாஜக போராடுவதாக திமுகவினர் கூறுகின்றனர். பாஜவுக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. திமுகவுக்குதான் விளம்பரம் தேவை. பெண்களை காப்பாற்ற திராணியில்லாமல், புதிய திட்டங்களை நீங்கள் கொண்டு வந்து என்ன பயன்? பெண்களை முதலில் காப்பாற்றுங்கள், பெண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு சுயமரியாதையை சொல்லிக் கொடுத்தவர் கருணாநிதி. அவர் குடும்பத்தில் இருந்து வந்தவரா நீங்கள்? உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். நீங்கள் நான்கு ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோடுகிறீர்கள். மத்திய அரசின் நிதி எவ்வளவு வந்துள்ளது என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்குக்கூட எளிதாக போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தடையை மீறி யாத்திரை செல்ல முயன்றதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, மாநில மகளிரணி தலைவர் உமாரதி மற்றும் பாஜக மகளிரணியினர் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE