எழுந்து வா கண்ணகியே: கையில் சிலம்புடன் நீதி கேட்டு போராடிய பாஜக மகளிரணியினர் 

By கி.மகாராஜன்

மதுரை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பாஜக மகளிரணியினர் கண்ணகி வேடம் அணிந்து கையில் சிலம்பு ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பாஜக மகளிரணி சார்பில் தடையை மீறி நீதி யாத்திரை போராட்டம் இன்று நடைபெற்றது.

மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் (கண்ணகி கோயில்) முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க பாஜக மகளிரணியினர் பலர் தலைவிரி கோலத்தில் கண்ணகி போல் வேடமணிந்து கையில் சிலம்புடன் பங்கேற்றனர்.

எழுந்து வா, எழுந்து வா, கண்ணகியே எழுந்து வா, எம் குல மாந்தருக்கு நீதி தா?, யார் அந்த சாரு, பேர் என்ன கூறு? என பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக அவர்கள் கோயில் முன்பு இருந்த அம்மியில் மிளகாய் வத்தல் அரைத்தனர். உரலில் மிளகாய் வத்தல் போட்டு உலக்கையால் இடித்தனர். பல பெண்கள் தீச்சட்டி ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த கேத்தரின் என்பவர் மதுரைக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் இன்று காலை சேலை அணிந்து செல்லத்தம்மன் கோயிலுக்கு வந்தார். அப்போது போயிலுக்கு முன்பு திரண்டிருந்த பாஜக மகளிரணியினரிடம் விசாரித்தார். அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த பெண்ணுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்த வந்திருப்பதாக பாஜகவினர் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய கேத்தரின் அங்கிருந்த உரலில் மிளகாய் வத்தலை போட்டு இடித்தார்.

பின்னர் அவர் கூறுகையில், எந்த நாடாக இருந்தாலும் பெண்கள் மேம்பாடு, பாதுகாப்பு என்பது முக்கியம். இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கடாது. அதற்காக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தேன். யார் போராட்டம் நடத்துகிறார்கள். எந்தக் கட்சியினர் போராடுகின்றனர் என்பது எனக்கு தெரியாது என்றார். கேத்தரினுடன் பாஜகவினர் ஆர்வமாக செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இப்போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பாஜக மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE