பொங்கல் பண்டிகையையொட்டி 18 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி: 13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

By KU BUREAU

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை ஜன.13-ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ என்ற கலைவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் சங்கமம் கலை நிகழ்ச்சிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன.13-ம் தேதி கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் தொடங்கி வைக்கிறார். சங்கமம் கலை நிகழ்ச்சிகள் 17-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் சென்னை மாநகரின் முக்கியமான 18 இடங்களில் நடைபெறுகின்றன.

மாலை 6 முதல் 9 மணிவரை: அதன்படி, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகளை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் கண்டுகளிக்கலாம்.

இவ்விழா நடைபெறும் நாட்களில் அனைத்து இடங்களிலும் தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும் உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE