மாணவி பாலியல் வன்கொடுமை; வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம்: திருமாவளவன்

By KU BUREAU

சென்னை: அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தவிர்த்து வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது. அதனால், அரசும், காவல்துறையும் நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை. இப்பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே விசிக-வின் நிலைப்பாடு. அதேவேளையில் எதிர்க்கட்சிகளும் இந்த சம்பவத்தை அரசியலாக்குவதற்காகப் போராட்டங்கள் நடத்தக் கூடாது.

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட அந்த குற்றச்செயல் பெரும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தவிர்த்து வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது. அதனால், அரசும், காவல்துறையும் நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.

ஞானசேகரன் சிறையில் இருக்கும்போதே விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும். அவரையும் தாண்டி வேறு யாரும் அந்தக் குற்றச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களும் கைது செய்யப்பட வேண்டும். விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று திருமாவளவன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE