இன்று ஜனவரி 2ம் தேதி முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்களின் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய கால அட்டவணை அமலுக்கு வந்தது. இந்த புதிய கால அட்டவணையின் படி சென்னையில் இருந்து அரக்கோணம் வரையில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் நேரத்திலும், அதே போன்று சென்னையில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராமுக்கு காலை 7.35-க்கு புறப்படும் ரயில் ஆவடி சென்றடையும் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
அதேபோல் திருத்தணிக்கு இரவு 8.10-க்கு புறப்படும் ரயில், திருவள்ளூருக்கு இரவு 8.15-க்கு புறப்படும் ரயிலின் நேரமும் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஆவடி, அரக்கோணம், பட்டாபிராம் செல்லும் 6 ரயில்களின் எண் மற்றும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு காலை 10.01, மாலை 6.01-க்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டுக்கு மாலை 5.55-க்கு புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இந்த வழித்தடத்தில் 14 ரயில்களின் எண் மற்றும் 4 ரயில்களின் எண் மற்றும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. சூலூா்பேட்டை, வேளச்சேரி மாா்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த நேர மாற்றம் இன்று ஜனவரி 2 முதல் வார நாள்களில் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். இதன்படி 10 முதல் 20 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.