அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சீமான் கைது

By KU BUREAU

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (டிச. 31) நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து வள்ளுவர் கோட்டத்தில் முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீஸார் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். தடையை மீறி ‘குற்றவாளிகளை தப்பிக்க விடாதே’ என்ற வாசகங்களை அடங்கிய பதாகைகளுடன் அங்கு வந்திருந்த நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்தனர்.

இவர்களை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்துக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும், அவரது காரில் இருந்து இறங்கியதும் உடனடியாக போலீஸார் கைது செய்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறைக்கு எதிராகவும், திமுக அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் குறித்து சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``ஆர்ப்பாட்டத்துக்கான காரணத்தை விளக்கக்கூட அனுமதிக்காமல் கைது செய்கின்றனர். இதுதான் உண்மையான ஜனநாயகமா? பாலியல் வன்கொடுமைக்கு தக்க நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறவழியில் போராடுபவர்களையும் கைது செய்வார்கள். பின் எங்கே கருத்து சுதந்திரம் இருக்கிறது? இந்த கொடுமைகளுக்கு எல்லாம் நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும், நேரு ஸ்டேடியம் அருகே அமைந்துள்ள கண்ணப்பர் திடல் சமூகநலக் கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கும் தொடர்ந்து நாதகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE