ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுப்பன்றிகள், மான்களால் நெல் உள்ளிட்ட விவசாயம் அழிந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாத்தூர்நாயக்கன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியிள்ள கிராமங்களில் நெல், சோளம், மிளகாய், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் 200 ஏக்கர் பரப்பளவில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதனால் இரவு, பகலாக வயல்வெளிகளில் விவசாயிகள் காட்டுப் பன்றிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன் பெய்த தொடர்மழையால் ஏற்கெனவே நெல், உளுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. தற்போது மீதமுள்ள பயிர்களையும் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் பரமக்குடி பகுதியில் கமுதக்குடி, இலந்தைகுளம், தெளிச்சாத்த நல்லூர், பீயனேந்தல், வெங்காளூர், சங்கங்கோட்டை, எஸ்.அண்டக்குடி, மேலாய்க்குடி உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து நெல், கரும்பு, சிறுதானிய பயிர்களை மேய்ந்து சேதப்படுத்தி உள்ளன. இப்பகுதிகளில் தொடர்ந்து விவசாயத்தை வன விலங்குகள் அழித்து வருவதால் வரும் ஆண்டுகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.
பரமக்குடி அருகே இலந்தைகுளம் விவசாயி பாஸ்கர பத்மநாபன் கூறும்போது: எனது வயல்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மான்கள் கூட்டமாக வந்து நெல் பயிரை மேய்ந்து சேதப்படுத்திவிட்டுச் சென்றன. தொடர்ந்து சேதப்படுத்துவதால் நெல் விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. வனத்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உரிய இழப்பீடும் வழங்குவதில்லை என்றார்.
» சென்னை மாநகராட்சியில் 35% தொழில்வரி உயர்வு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
» மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
எனவே மாவட்ட நிர்வாகம் காட்டுப் பன்றிகள், மான்களை கட்டுப்படுத்தி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.