குன்னூர்: குன்னூரில் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க வால்பாறை மற்றும் கூடலூரை போன்று முன்னெச்சரிக்கை கருவியை வனத்துறையினர் அமைத்துள்ளனர். சூரிய ஒளி மூலம் இயங்கும் கருவி வன விலங்குகள் வந்தால் அதிக ஒலி எழுப்புகின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளான கரடி, சிறுத்தை காட்டுமாடுகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதியில் வரக்கூடிய வனவிலங்குகள் குடியிருப்புகளை சேதப்படுத்தியும் கால்நடை மற்றும் வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடிச் செல்கின்றன.
இதனால் குடியிருப்பு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக, குன்னூர் அருகே உள்ள டெண்ட்ஹில் பகுதியில் கரடி ரேஷன்கடைகள், பள்ளியின் சமையலறை, வணிக வளாகங்களில் உள்ள கதவுகளை உடைத்து, அங்குள்ள உணவுப் பொருட்களை உண்டு செல்கின்றன. இதனால் அப்போது மக்கள் கடும் அவதி அடைந்த வருகின்றனர். கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இதற்கு மாற்று வழியாக நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை கருவி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவ்வழியாக கரடிகள் வந்தால் தாமாக அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பக் கூடிய தன்மை கொண்டுள்ளது. முழுக்க முழுக்க சூரிய ஒளிச் சக்தி மூலம் இயங்கக்கூடியது. வால்பாறை, கூடலூரை தொடர்ந்து தற்போது குன்னூர் பகுதியில் இந்த முன்னெச்சரிக்கை கருவி அமைக்கப்பட்டு வருகிறது.
» சென்னை மாநகராட்சியில் 35% தொழில்வரி உயர்வு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
» மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
இதன் மூலம் வனவிலங்குகள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வந்தால் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற முன்னெச்சரிக்கை கருவியை அமைக்கப்படும் என நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் தெரிவித்தார்.