பல்லாவரத்தில் பரபரப்பு: பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் மகனை கண்டித்து சுவரொட்டிகள்!

By பெ.ஜேம்ஸ் குமார்

பல்லாவரம்: பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகனைக் கண்டித்து பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வனஜா. இவரது மகன் தினேஷ்பாபு(35). இவர், கடந்த 21-ஆம் தேதி பொழிச்சலூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளே வருகை தந்த பொழிச்சலூர், விநாயகா நகர், மாசிலாமணி தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரான சரவணன் என்பவரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பதிலுக்கு சரவணனும் தினேஷ்பாபுவை தாக்கினார். இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்,பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ் பாபு மாற்றுத்திறனாளி நபர் சரவணனை தாக்கியதைக் கண்டித்து, இன்று பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

தமிழ்நாடு ஜனநாயக மக்கள் நல முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரொட்டியில், ஆதிக்க சாதி வெறியோடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சரவணனை சாதி பெயரை சொல்லி, எட்டி உதைத்து தாக்கிய தினேஷ் பாபு மீது "சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடை" என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். இந்த சுவரொட்டியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE