குடவோலை முறை கல்வெட்டுகள்: உத்திரமேரூரில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு! 

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள குடவோலை முறை கல்வெட்டுகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிசம்பர் 31) ஆய்வு செய்தார்.

உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் உள்ளன. இதில் கி.பி. 920-ம் ஆண்டில் முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குடவோலை முறை தேர்தல் குறித்தும் தகவல்கள் உள்ளன. இதனால் இந்தக் கோயில் குடவோலை முறைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வந்தார். பின்னர் அங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். அந்தக் கல்வெட்டுகளில் உள்ள விவரங்களையும் தொல்லியல் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதற்கு பின்னர் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கவர்னருக்கு கோயில் அர்ச்சகர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உத்திரமேரூர் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை உதவி ஆட்சியர் ஆஷிக்அலி, மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஆளுநர் வருகையையொட்டி உத்திரமேரூர் முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஜார் வீதி வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. ஆளுநர் சென்ற பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE