சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 19 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடலில் இறங்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் காவல் ஆணையர் தடை விதித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் இன்று நள்ளிரவில் (டிச.31) இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் திரள்வார்கள். ஆட்டம்பாட்டம், கொண்டாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்பார்கள்.
பட்டாசுகளும் வெடிக்கப்படும். ஒருவருக் கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்கள். இந்நிலையில், புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
அதன்படி, கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் 19 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். காவல் துறையினருக்கு உதவியாக, 1,500 ஊர்க்காவல் படையினரும் பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், 425 இடங்களில் வாகனத் தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில் பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனைகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ டிச.31, 2024
» பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன் வித்தியாசத்தில் தோல்வி
கடலில் இறங்க அனுமதியில்லை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, 31-ம் தேதி (இன்று) முதல் நாளை வரை கடல் நீரில் இறங்கவோ,குளிக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ரோந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.