கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் 85 பேர் கைது

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 85 பேரை போலீஸாரை கைது செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு அனுமதியின்றி விநியோகம் செய்ததாக, சென்னையில் தவெக தொண்டர்களையும், அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வெற்றிக் கழக தொண்டரணி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நிர்வாகிகள், கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில், தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மணிகண்டன், துணை தலைவர் சூர்யா, பர்கூர் தொண்டரணி தலைவர் பசுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தவெக தலைவர் விஜய், ஆளுநருக்கு எழுதிய கடிதம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டதையும், தங்களது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்து வந்த, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தவெக தொண்டரணி பெண் நிர்வாகிகள் 9 பேர் உட்பட 44 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதே போல், ராயக்கோட்டை மேம்பாலம் அருகே மாவட்ட தலைவர் வடிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர தலைவர் சசி மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 41 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE