ராமநாதபுரம்: உயிரிழந்த மீனவரின் உடற்கூறு இறுதி ஆய்வறிக்கை வழங்காததை கண்டித்து, மீனவரின் குடும்பத்தினர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே எம்.பி.கே.வலசையைச் சேர்ந்த மீனவர் முனியாண்டி. இவரது மனைவி வசந்தா மற்றும் அவரது உறவினர்கள், சிஐடியூ கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் இன்று (டிச.30) ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர் முனியாண்டி வைகை ஆற்று முகத்துவாரத்தில் மீன் பிடிக்கும்போது கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சேற்றில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
அவரது உடற்கூறு ஆய்வு இறுதி அறிக்கையை அரசு மருத்துவமனை வழங்காததை கண்டித்தும், அவரது இறப்பிற்கு மீன்வளத்துறை நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து போலீஸார் அவர்களை ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராஜலுவிடம் வழங்கினர்.
இதுகுறித்து வசந்தா செய்தியாளர்களிடம் கூறும்போது: எனது கணவர் முனியாண்டி(45) கடந்த 15.06.2021 அன்று உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் எதிரில் உள்ள வைகையாற்று முகத்துவாரத்தில் மீன் பிடிக்கும்போது சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
» விஜய் எழுதிய கடித நகல்கள் விநியோகம்: மதுரையில் தவெகவினர் மீது நடவடிக்கை
» அறவழியில் மக்களைச் சந்தித்தவர்களை கைது செய்வது தான் ஜனநாயகமா? - விஜய் கண்டனம்
இதுகுறித்து உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் உடற்கூறு ஆய்வு இறுதி அறிக்கை வழங்காததால் மீன்வளத்துறையால் வழங்கப்படும் நலவாரிய நிவாரண நிதி மற்றும் காப்பீடு நிதி கிடைக்கவில்லை. நான் கூலி வேலை செய்து, 10-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்களை வளர்த்து வருகிறேன். எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை. அதனால் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலையம், அரசு மருத்துவமனை, மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் என பலரிடம் கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே எனது கணவரின் உடற்கூறு இறுதி ஆய்வறிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவும், மீன்வளத்துறையின் நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.