தமிழக முதல்வரை விமர்சிக்க புதுச்சேரி அமைச்சருக்கு தகுதியில்லை: எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோபம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “பாஜக தலைவர் அண்ணாமலைக்காக, தமிழக முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்க, அமைச்சர் நமச்சிவாயத்துக்கு தகுதியில்லை” என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில அமைப்பாளருமான சிவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா இன்று (டிச.30) கூறியதாவது: “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வைத்து, தமிழக அரசை வாய்க்கு வந்தபடி அதிமுகவும், பாஜகவும் விமர்சிப்பது ஏற்புடையதல்ல.

பாலியல் குற்றவாளி கைது செய்யப்பட்டு, விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்த தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது களங்கம் கற்பிக்க முயற்சித்து வருகிறார். அண்ணாமலையின் கேலிகூத்துக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முட்டுக்கொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

அண்ணாமலை சாட்டையில் அடித்துக்கொண்டது திமுக ஆட்சிக்கான சவுக்கடி என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பேசி உள்ளார். தமிழக அரசியலைப் பற்றி பேச நமச்சிவாயத்துக்கு எந்த தகுதியும் இல்லை. புதுச்சேரியில் நடக்கும் ஆட்சியை சிந்தித்து பார்த்து கருத்து தெரிவிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்திலும் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதல்வர் ரங்கசாமியின் மதிப்பை குறைத்து, அவரது கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு பின்னடைவையே ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக செயல்படுகிறது.

முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நீதி கிடைத்தது? என்ற கேள்வி எழுகிறது. அதில் கைதானவர்களில் ஒருவர் சிறையில் மர்மமான முறையில் இறந்தது பற்றி இதுவரை எந்த உண்மையும் வெளிவராமல் மறைப்பதற்கு காரணம் என்ன? புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியாத புதுச்சேரி உள்துறை அமைச்சர் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அண்ணாமலைக்கு முட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இதுபோன்ற விமர்சனங்களை அமைச்சர் நமச்சிவாயம் தொடர்ந்தால் திமுக வேடிக்கை பார்க்காது என எச்சரிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE