பொங்கல் பரிசுத்தொகை இல்லாததால் தமிழக மக்கள் பெரும் ஏமாற்றம்: கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

By KU BUREAU

சென்னை: பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கல் சிறப்பாக கொண்டாட மக்கள் தயராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் வழக்கமாக வழங்கப்படும் பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழக நிதியமைச்சர் அவர்கள் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வது, இயற்கை பேரிடருக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை தராமல் சொற்ப நிதியை வழங்கியிருப்பது, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற காரணங்கள் அனைத்தும் ஏற்கத்தக்கது தான். இருப்பினும் பொங்கல் பரிசுத் தொகையை நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி வழங்க மறுப்பது பொருத்தமல்ல.

எனவே, தமிழக அரசு நிதி சிரமம் இருப்பினும், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றப்படுவதைப் போல இந்த ஆண்டு பொங்கலுக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகையாக ரூ.1000/- வழங்கிட முன்வர வேண்டுமென்று சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது’ என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE