சென்னை: காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வரை பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், திருட்டு, வழிப்பறி, போதை பொருட்கள், கள்ளச்சாராய சாவு என சட்ட மீறல்கள் அதிகரித்து வருகிறது. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதை விட, 2026 தேர்தல் ஆயத்த பணிகளில், நேரத்தையும் நாட்களையும் முதல்வர் ஸ்டாலின் வீணடித்து வருவதால் தமிழக அரசு நிர்வாகம் செயலிழந்து நிற்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை மாநகர காவல் துறையின் நடவடிக்கை, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முதல் உயர் அதிகாரிகள் வரை உண்மையை கண்டறிய முழு முயற்சி எடுக்கவில்லை. எனவே, தமிழக மக்கள் காவல்துறையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். முக்கியமாக சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழக மக்களால் தற்போது கேட்கப்படும் " யார் அவர்" என்ற கேள்விக்கு விடையை தெரிவிக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் முதல்வரின் நேரடி மேற்பார்வையில் காவல்துறையில், திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மூலம் நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்பட்டு, காவல்துறை சீரழிந்து வருகிறது. எனவே காவல்துறையின் அமைச்சராக விளங்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல்துறையில் போதி கவனம் செலுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதால், தமிழக காவல்துறை சீர்மிகு காவல்துறையாக செயல்படும் வகையில் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.
» மாணவிகளிடம் அச்சத்தை விதைக்கும் அருவருப்பான அரசியல்: இபிஎஸ்சை விமர்சித்த அமைச்சர் கீதா ஜீவன்!
» போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு: அன்புமணி கண்டனம்
காவல்துறையினர் செய்யும் தவறுகளை உடனடியாக விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கும் வகையில் காவல் துறையினர் மீது பதியப்படும் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.