தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு - பூட்டை உடைத்து புதிய பதிவாளர் பொறுப்பேற்பு

By KU BUREAU

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் அறையின் பூட்டை உடைத்து, புதிய பதிவாளர் பொறுப்பேற்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்ப் பல்கலை.யில் 2017-18ல் ஆண்டுகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, அப்போதைய துணை வேந்தர் பாஸ்கரன் பணி நியமனம் செய்தார். அவர்கள் உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப் பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.

2021ல் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட திருவள்ளுவன், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படும் 40 பேரையும் தகுதிகாண் பருவம் அடிப்படையில் நிரந்தரப் பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

ஆனால், திருவள்ளுவன் முறையான பதிலை அளிக்கவில்லை என்று கூறி, அவரை கடந்த அக்டோபர் 20ம் தேதி, பணியிடை நீக்கம் செய்தும், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் ஆளுநர் தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதையடு்த்து, தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கரை பொறுப்பு துணை வேந்தவராக ஆளுநர் நியமித்தார்.

இந்நிலையில், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையை சங்கர் உருவாக்கி வருவதாலும், பல்கலை.யில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், அவர் துணை வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பொறுப்பு பதிவாளரான தியாகராஜன் ஆணை வெளியிட்டுள்ளார். மேலும், அவருக்குப் பதிலாக, ஆட்சிக்குழுவில் துணை வேந்தர் பொறுப்புக் குழு நியமிக்கப்படும் வரை, ஆட்சிக்குழு உறுப்பினர் பாரத ஜோதி துணை வேந்தர் பணியை கவனிப்பார் எனவும் அந்த ஆணையில் தெரிவித்துள்ளார்.

இதேபோல, ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான விசாரணை ஆணைய வரம்புக்குள் பொறுப்பு பதிவாளராக உள்ள தியாகராஜன் இருப்பதாலும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் அவரை பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக, மறு ஆணை பிறப்பிக்கும் வரை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் இணைப் பேராசிரியர் வெற்றிச்செல்வன் பொறுப்பு பதிவாளாராக இருப்பார் எனவும் பொறுப்பு துணை வேந்தர் சங்கரும் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தனர்.

இவ்வாறாக இருவரும் ஒருவரையொருவர் நீக்கி உத்தரவிட்டுள்ள சம்பவம் பல்கலை. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, 2 பேர் பிறப்பித்த ஆணைகளை நிறுத்தி வைக்குமாறும், பல்கலை.யில் பழைய நிலையே தொடர வேண்டும் எனவும் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக பல்கலைக்கழக பணியாளர்கள் தரப்பினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (டிச.30) காலை பல்கலைக்கழகத்துக்கு வந்த, பதிவாளர் பொறுப்பாக இருந்த தியாகராஜன் அலுவலக வேலைக்கான சாவியை வழங்க மறுத்து, வேறொரு அறையில் அமர்ந்திருந்தார். மேலும், தியாகராஜனின் ஆதரவாக செயல்படும் பேராசிரியர்கள், மீண்டும் அவரை பணியில் தொடர வேண்டும் எனக் கூறினர். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் சார்பில், பொறுப்பு பதிவாளராக புதியதாக அறிவிக்கப்பட்ட வெற்றிச் செல்வன் பதவி ஏற்க முயன்றார். இந்நிலையில் பதிவாளர் அறையானது பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த அறையை பல்கலைக்கழக பணியாளர்கள் உடைத்து, வெற்றிச்செல்வனை பதவி ஏற்க வைத்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE