சென்னை: கீழ்ப்பாக்கத்தில் பாழடைந்த நிலையில் பயனற்ற நிலையில் ஜெயலலிதா பெயரிலான விளையாட்டு அரங்கம் உள்ளது. விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை அண்ணாநகர் மண்டலம் கீழ்ப்பாக்கம் பகுதியில் ஜெயலலிதாவின் பெயரில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம் முறையான பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு பயன்பாடின்றி பூட்டியே இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு மைதானங்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், உள் மற்றும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் மாடம் என அனைத்து வசதிகளும் கொண்ட இந்த மைதானத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பூட்டியே வைத்திருப்பது விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உடற்பயிற்சிக் கூடம் என மக்கள் நலனுக்காக ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை முடக்குவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது அவரின் பெயரிலான விளையாட்டு அரங்கத்தையும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மூடியே வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
» பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை ரூ.1000 வழங்க வேண்டும்: முத்தரசன் வேண்டுகோள்
» பெண்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை கூட கொடுக்க முடியாத திராவிட மாடல் ஆட்சி - அண்ணாமலை சீற்றம்
மக்களுக்கும், மாநிலத்திற்கும் எந்த வகையிலும் பயன்படாத சர்வதேச கார் பந்தயம் நடத்துவதற்கும், விளம்பரத்திற்காகவும் கோடிக் கணக்கில் மக்கள் பணத்தை வீணடிக்கும் திமுக அரசு, சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து வகையிலும் உகந்த இடமான இந்த மைதானத்தை சீரமைக்க தயங்குவது ஏன்? என்ற கேள்வியை விளையாட்டு வீரர்கள் எழுப்புகின்றனர்.
எனவே, விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாழடைந்த நிலையில் பயன்பாடற்று கிடக்கும் ஜெயலலிதா பெயரிலான விளையாட்டு அரங்கத்தை சீரமைப்பதோடு, அதனை விரைவாக விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.