திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த ஏரிக்கு வடகிழக்கு பருவ மழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து மழைநீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது மிக அதிகளவில் வந்ததால், கடந்த 12-ம் தேதிமுதல் 18-ம் தேதிவரை பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 26-ம் தேதி இரவு திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. அது மட்டுமல்லாமல், ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 26-ம் தேதி இரவு முதல் 27-ம் தேதி காலை வரை விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீண்டும் உபரிநீரை கடந்த 27-ம் தேதி காலை 9 மணிமுதல் நீர்வள ஆதாரத் துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
விநாடிக்கு 1000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று முன்தினம் மதியம் முதல் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. ஆகவே, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 3,135 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 34.96 அடியாகவும் உள்ளது.
» விபத்து பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை: ரூ.90.37 கோடியில் இறுதிகட்ட பணி - போக்குவரத்துத் துறை
பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவதால், கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ள நம்பாக்கம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, மெய்யூர், திருக்கண்டலம், மணலி புதுநகர், சடையான் குப்பம்,எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களுக்கு நீர்வள ஆதாரத் துறை வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.