சென்னை: ஆழிப்பேரலையை எதிர்கொண்டு நிற்கும் வள்ளுவர் சிலைபோல தடைகளை தகர்த்து தமிழகம் முன்னேறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகப் பொதுமறையாம் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் உலக அடையாளமாகத் திகழ்கிறார்.
உலக வாழ்வியலுக்கான பொது முறையை வழங்கும் அறநெறிகளைக் கொண்ட திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் உலகளாவிய புகழ் சேர்த்திடும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலையை நிறுவியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து புகழ் சேர்த்த கருணாநிதி, தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை நடைமுறைப்படுத்தினார். குறள் நெறியை அனைத்து மக்களுக்கும் பரப்புகின்ற வகையில் பேருந்துகளிலும் திருக்குறளை எழுதியவர் அவர். உலக தமிழர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்த்தார் கருணாநிதி.
» விபத்து பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை: ரூ.90.37 கோடியில் இறுதிகட்ட பணி - போக்குவரத்துத் துறை
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ டிச.29, 2024
25 ஆண்டு நிறைவு: கடலில் கம்பீரமாக உயர்ந்து நின்ற சிலையை காண உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். சுனாமியின்போது சிலையின் தலை வரை ஆழிப்பேரலை தாக்கியபோதும், அதனை எதிர்கொண்டு எவ்வித சேதாரமுமின்றி கம்பீரமாக நின்றார் திருவள்ளுவர்.
சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. கால் நூற்றாண்டு காலத்தை கடந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கவிருக்கும் சிலைக்கு, பேரறிவுச் சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது நம் திமுக அரசு.
கண்ணாடிப் பாலம்: பொதுவாழ்வுக்கும் தனி வாழ்க்கைக்கும் துணை நிற்கும் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரை இளந்தலைமுறை தமிழர்களும் போற்றிடும் வகையில் பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா கன்னியாகுமரியில் டிச. 30, 31, மற்றும் ஜன.1 ஆகிய நாட்களில் சிறப்போடு நடைபெறவிருக்கிறது. வெள்ளி விழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே இந்தியாவிலேயே முதன்முறையாக கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. நவீனத் தொழில்நுட்பத்தில் கடல் நடுவே அமைந்துள்ள இந்த கண்ணாடிப் பாலத்தை திறந்து வைக்கவிருக்கிறேன். வள்ளுவர் வழங்கிய திருக்குறளின் நெறி போற்றி நாம் வாழ வேண்டும்.
தமிழின் சிறப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. ஆழிப்பேரலையை எதிர்கொண்டு வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்பதுபோல தமிழகம் தடைகளைத் தகர்த்து முன்னேறும். திருக்குறளில் உள்ள அதிகா ரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.