சென்னை: அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை ரூ.90.37 கோடியில் மேம்படுத்தும் பணிகள் இறுதிகட்டத்தில் இருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை போரூரை சேர்ந்த க.அன்பழகன் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறை அளித்த பதில்: வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, போதிய சாலை கட்டமைப்பு வளர்ச்சி இல்லாதது போன்றவற்றால் தமிழகத்தில் விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதல்வரின் அறிவிப்புப்படி, போக்குவரத்து ஆணையர் தலைமையில் சிறப்பு செயலாக்க பணிக்குழு அமைக்கப்பட்டு, ரூ.90.37 கோடி செலவிடப்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்தும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களில் 7.21 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அதிவேகம் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 62,637 ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் சாலை பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநில அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் 2000-ல் இருந்து நடப்பாண்டு அக்டோபர் வரை விபத்துகளின் சதவீதம் 0.98-ல் இருந்து 0.15-ஆக குறைந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 7 மடங்காக அதிகரித்தபோதிலும், விபத்து, உயிரிழப்புகள் குறைந்துள்ளன. 2030-ல் விபத்துக்களை 50 சதவீதம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ டிச.29, 2024
» மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு பற்றி சர்ச்சையை உருவாக்கும் காங்கிரஸ்