மேற்குபுறவழிச்சாலை திட்டப்பணி நிலவரம் கண்காணிப்புப் பொறியாளர் ஆய்வு: 47 சதவீதம் பணிகள் நிறைவு 

By டி.ஜி.ரகுபதி

கோவை: மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணி நிலவரம் கண்காணிப்புப் பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். இதுவரை 47 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மதுக்கரை மைல்கல் பகுதியில் தொடங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக 32.43 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்குபுறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து இதில் முதல்கட்டமாக ரூ.250 கோடி மதிப்பில் மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறையின் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கண்காணிப்புப் பொறியாளர் எச்.ரமேஷ் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கோவை கோட்டப் பொறியாளர் அ.ஞானமூர்த்தி மற்றும் அதிகாரிகள் விளக்கினர். இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ''மைல்கல் பகுதியில் தொடங்கி சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர், மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையன்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இச்சாலை முடிவடைகிறது.

மூன்று கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மைல்கல் - மாதம்பட்டி வழித்தடத்தில் இதுவரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் போடப்பட்டு தார்ச்சாலைக்கு முந்தைய நிலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள தூரத்துக்கு சாலைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்குபுறவழிச்சாலை திட்டப்பணி தற்போதைய சூழலில் 47 சதவீதம் முடிந்துள்ளது.

இரண்டாம் கட்டமாக மாதம்பட்டியில் தொடங்கி - கணுவாயில் முடிவடையும். பேரூர், மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம் கிராமங்கள் வழியாக 12.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-ம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. முதல்கட்டப் பிரிவில் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களையும் கண்காணிப்புப் பொறியாளர் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க கண்காணிப்புப் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE