சென்னை: எங்கள் உட்கட்சிப் பிரச்சனைக் குறித்து மற்றவர்கள் பேசத்தேவையில்லை என தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தப் பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
நேற்று புத்தாண்டை ஒட்டி புதுச்சேரிக்கு அருகில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவராக முகுந்தனை பாமக நிறுவனம் ராமதாஸ் அறிவித்தார். அப்போது மேடையிலிருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மைக்கை மேஜையில் வீசி விட்டு, அதில் அதிருப்தியடைந்து முகுந்தன் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனால் ஆவேசமடைந்த ராமதாஸ், நான் உண்டாக்கிய கட்சி. யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது என்றார். இதையடுத்து அன்புமணி ராமதாஸ். பனையூரில் தனது அலுவலகம் உள்ளதாகவும், அதன் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அறிவித்துவிட்டு சென்னை புறப்பட்டுச் சென்றார்.
இதனால் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. இதனிடையே முகுந்தன், தைலாபுரம் வீட்டில் ராமதாஸை சந்தித்து, ஆசி பெற்றதாகவும், அதையடுத்து இரவு அன்புமணி, முகுந்தனிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியான நிலையில், பாமக ஊடகப் பிரிவு இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதோடு,, பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பை ஏற்கவில்லை என முகுந்தன் கூறியதாக தெரிகிறது.
» அமைச்சர் பதவியை எதிர்பார்த்து அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டார்- டி.கே.எஸ். இளங்கோவன்
» எங்க உட்கட்சிப் பிரச்சனையை நாங்க பேசிக்கொள்கிறோம்: அன்புமணி ராமதாஸ்
இதையடுத்து நேற்றிரவு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸ் மற்றும் அன்புமணியோடு பேசி சமரச முயற்சி மேற்கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து இன்று தைலாபுரம் வந்த பாமக தலைவர் அன்புமணியோடு, கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பசுமைத் தாயகம் அருள், கட்சியின் பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோருடன் ராமதாஸ் பேசியுள்ளார். பின்னர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் தனியாக பேசியுள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், எதிர்வரும் ஆண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு, கட்சியின் வளர்ச்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், சித்திரை முழு நிலவு மாநாடு, அதைத்தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படவேண்டும், 10.5 இட ஒதுக்கீடு போன்ற முன்னெடுக்க வேண்டிய போராட்ட நடவடிக்கைகள் குறித்தும் குழுவாக பேசினோம்.
மேலும் பாமக ஜனநாயகக் கட்சி. அதனால் பொதுக்குழுவில் காரசாரா விவாதம் நடப்பது இயல்பு. இது உட்கட்சிப் பிரச்சனை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உட்கட்சிப் பிரச்சனைக் குறித்து மற்றவர்கள் பேச வேண்டிய அவசியமில்லை என்றார். ஆனால் முகுந்தன் நியமனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அன்புமணி பதிலளிக்கவில்லை