கடலூர்: பிரபல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பிரபல தனியார் பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் மோப்பநாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்பட்டது. தீவிர சோதனையில், மருத்துவமனையில் வெடிகுண்டு மற்றும் வெடி பொருட்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று போலீஸார் தெரிவித்தனர்.

கடலூர் முதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று (டிச.29) மதியம் சுமார் 12 மணிக்கு கடலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள பல்நோக்கு மருத்துமணையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதைனையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீஸார் இது குறித்த தகவலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று வெடிகுண்டு தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் லியோ வரவழைக்கப்பட்டு மருத்துவமனை முழுவதுமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையிட்டனர்.

பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளும், உடன் வந்திருந்தோரும் பதற்றமடைந்ததால் சிறிது நேரம் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE