மதுரை@ சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகள்: அச்சத்தில் மக்கள் 

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகளால் மக்கள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர்.

மதுரை மாநகராட்சி சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு, விபத்து ஏற்படுத்தும் வகையில் தாங்கள் வளர்க்கும் மாடுகளை அவிழ்த்துவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. வாகன, ஓட்டிகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கால்நடை உரிமையாளர்கள் மீது காவல்துறை மூலம் எம்ஐஆர் பதிவிட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சில நாளுக்கு முன்பு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் 2 காளை மாடு உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இருப்பினும், மதுரை மாநகராட்சி ஆனையூர், வள்ளுவர் காலனி, பனங்காடி, தபால் தந்திநகர், குலமங்கலம், நத்தம் பறக்கும் மேம்பால சாலையில் ஆத்திகுளம், பீ.பி.குளம், ரிசர்வ்லைன், அழகர்கோவில் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக பகலிலும், இரவிலும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கும் விபத்து அச்சம் போக்குவரத்து இடையூறு இருப்பதாக புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை ஆனையூர் பிரதான சாலையில் நேற்று இரவில் சாலையின் முகப்பு விளக்குகள் வெளிச்சத்தில் மாட்டுத்தொழுவம் போன்று கூட்டம், கூட்டமாக படுத்துக்கொண்டன. அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நிறுத்தி கால்நடைகளை கிளப்பிவிட்டு எடுத்துச்செல்லும் சூழலும் நேர்ந்தது.

பகலி மட்டுமின்றி இரவிலும், சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பால் விபத்து அச்சத்திலேயே செல்லவேண்டியுள்ளது. மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை தடுக்க நடவடிக்கையை அதிகாரிகள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE