புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு: கடலில் குளிக்க தடை!

By KU BUREAU

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து காவல்துறை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் 2025ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி பொதுமக்கள் அமைதியாகவும். பாதுகாப்பகாவும் புத்தாண்டு கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் சென்னை பெருநகரில் பணிபுரியும் கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி டிசம்பர் 31 இரவு 9 மணி முதல் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க காவல் ஆணையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகன வேக பந்தயத்தில் ஈடுபடுவர்களையும் தடுத்து கண்காணிக்க கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைத்து விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல் துறை பணி சிறப்பாக செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 31 மாலை முதல் டிசம்பர் 1ம் தேதி பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. கடற்கரையோரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னையில் மெரினா, சாந்தோம். எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள். குதிரைப் படைகள் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் கடற்கரை மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும், முக்கிய இடங்களில் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்கள். மேலும், அவசர மருத்துவ உதவிக்கு. முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப் படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE