தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு

By KU BUREAU

தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பாக, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திமுக, அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும், பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ரூ.500 முதல் ரூ.2000 வரை ரொக்கமாக வழங்கப்பட்டது. கடந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ரூ.1000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. அதேபோல், இந்தாண்டு பொங்கலின்போதும் ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் தொகுப்பு அறிவிப்பு மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு, உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், 2 கோடியே 20 லட்சத்து 94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பத்தினர் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகிப்பதற்கான டோக்கன் வழங்குதல், பொருட்கள் கொள்முதல் தொடர்பான தனித்தனி அறிவுறுத்தல்களை துறை வெளியிட்டுள்ளது. மேலும், முதல்கட்டமாக, பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், ரொக்கப்பணம் தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE