காய்ச்சலுக்கு மருந்தகத்தில் ஊசி போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: தாம்பரம் அருகே சேலையூர் சந்திரன் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகன் சந்தோஷ் (19) கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

கடந்த 22-ம் தேதி சந்தோஷிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது தாயார் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள மருத்துவரை பார்க்க அழைத்து சென்றுள்ளார். அங்கு கிளினிக் மூடப்பட்டிருந்ததால் அருகில் இருந்த ராகவேந்திரா மெடிக்கல் ஷாப் என்ற மருந்து கடையில் கேட்டபோது அங்கிருந்த ஜெயந்தி என்ற பெண் சந்தோஷை பரிசோதித்து விட்டு காய்ச்சலுக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

மறுநாள் 23-ம் தேதி சந்தோஷிற்கு ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டது உடனே அந்த மருந்து கடையில் சென்று கேட்ட பொழுது தைலம் தேயுங்கள் சரியாகிவிடும் என கூறியுள்ளனர் அதன் பிறகு கை கால்கள் வீங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட சந்தோஷ் உடல்நிலை மோசமாகி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்த பெற்றோர் தனது மகன் ஊசி போட்டதாலே இறந்ததாக சேலையூர் காவல் நிலையத்தில் நேற்று மதியம் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து சந்தோஷ் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சேலையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

இதற்கிடையே சந்தோஷ் மரணம் அடைய மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டதுதான் காரணம் எனக்கூறி அவரது நண்பர்கள் ராகவேந்திரா மெடிக்கல் ஷாப்பை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மருந்து கடை மூடப்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மெடிக்கல் ஷாப் நடத்திவரும் ஜெயந்தி (49) என்ற பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள் பி.ஏ படித்துள்ள அவர் 20 வருடங்களாக மெடிக்கல் ஷாப் நடத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஊசி போடவில்லை என அவர் போலீஸாரிடம் மறுத்துள்ளார் இது தொடர்பாக தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE