பனையூர் அலுவலகத்துக்கு வந்தார் அன்புமணி ராமதாஸ்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

By KU BUREAU

சென்னை: பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தடைந்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இன்று ராமதாஸ் - அன்புமணி இடையே நேரடியாக மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்புப்பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “2026 சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலம் தேவை. அதற்காக அன்புமணிக்கு உதவுவதற்காக முகுந்தன் பரசுராமனை இளைஞர் சங்க தலைவராக நியமனம் செய்கிறேன்” என்றார்.

அப்போது அருகில் இருந்த அன்புமணி ராமதாஸ் குறுக்கிட்டு “எனக்கு உதவியாகவா? எனக்கு வேண்டாம். கட்சி 4 மாதத்துக்கு முன்புதான் அவர் வந்திருக்கிறார். அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது. நல்ல திறமையான அனுபவசாலியை நியமிங்க” எனக் கூறினார். 'உனக்கு வேண்டாம் என்றால் நீ போ. இது நான் ஆரம்பித்த கட்சி நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். பரசுராமன் முகுந்தன் தான் இளைஞரணி தலைவர். இது என் கட்சி.. நான் ஆரம்பித்த கட்சி.. நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். உங்களுக்கு வேண்டாம் என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளுங்கள்" என்றார். ராமதாஸின் மகள் காந்திமதியின் மகன் தான் முகுந்தன்.

அதனையடுத்து, “பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருக்கிறேன். என்னை அங்கே வந்து சந்திக்கலாம்” என்று சொல்லி தொலைபேசி எண்ணை மேடையிலேயே தெரிவித்தார். இதனையடுத்து பொதுக்குழு அரங்கிற்கு வெளியில் அவர் வந்தபோது, தொண்டர்களும் நிர்வாகிகளும் ‘அன்புமணி வாழ்க’ எனக் கூறி முழக்கமெழுப்பினர்.

இந்த சூழலில் பொதுக்குழு முடிந்து நேரடியாக பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ளார் அன்புமணி ராமதாஸ். அவரை கட்சியின் நிர்வாகிகள் பலரும் சந்தித்து வருகின்றனர். இதனால் பாமகவில் பெரும் சலசலப்பான சூழல் உருவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE