கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பு: தடையை மீறி விஜயகாந்த் நினைவிடம் நோக்கி சென்றது பேரணி!

By KU BUREAU

சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணி நடத்தினர்.

தேமுதிக தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது .இதற்கான நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் தவெக தலைவர் விஜய் வரையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தேமுதிக அழைப்பு விடுத்தது.

விஜயகாந்தி நினைவு தினமான இன்று மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணி நடத்த தேமுதிக அனுமதி கோரியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விஜயகாந்த் நினைவுநாள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் விஜயகாந்த் நினைவிடத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் சுதீஷ் உள்ளிட்டோர் தலைமையில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதன்காரணமாக போலீஸாருக்கும் தேமுதிகவினருக்கும் இடையே சிறிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பேரணி நடத்தினால் கட்சியினரை கைது செய்ய பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் கைது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. சிறிய சலசலப்புக்குப் பின்னர் திட்டமிட்டபடி தேமுதிகவினர் பேரணி நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE