திண்டுக்கல்லில் தேசிய கைப்பந்து போட்டி: ஹரியானா அணி சாம்பியன்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த தேசிய அளவிலான பெண்கள் ஜூனியர் கைப்பந்து போட்டியில் ஹரியானா மாநில அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

தேசிய அளவிலான 46-வது பெண்கள் ஜூனியர் கைப்பந்து போட்டி திண்டுக்கல்லில் கடந்த 23-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடந்த போட்டிகளில் 25 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் விளையாடினர். இறுதிப்போட்டியில் ஹரியானா, மத்தியபிரதேச மாநில அணிகள் விளையாடின. போட்டி முடிவில் 27-க்கு 23 என்ற புள்ளிக்கணக்கில் மத்திய பிரதேச அணியை ஹரியானா அணி வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

மத்திய பிரதேச அணி இரண்டாவது இடம் பிடித்தது. தமிழ்நாடு மற்றும் குஜராத் அணிகள் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டன. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் ஜி.டி‌.என் கல்லூரி தாளாளர் ரத்தினம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கைப்பந்து கழக தலைவர் துரை முன்னிலை வகித்தார். அகில இந்திய கைப்பந்து பெடரேசன் செயலாளர் பிரிட்பல்சிங்சலூஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற ஹரியான அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. ஜி.டி‌.என் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE