சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100-க்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம் அண்ணா பல்கலைக் கழகத்தின் (POSH - Prevention of Sexual Harassment Committee) உள் விசாரணைக் குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களைச் சொல்லி புகார் அளித்திருந்தார்.
காவல் துறையினர் பல்கலைக் கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும் போது தான், இந்தச் சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்தப் பிரச்சினைத் தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாகப் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி எடுத்துக்கொள்ளப் பட்டது’ என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.