அண்ணாமலை வேடிக்கை காட்டுவதற்காக இதுபோல செய்கிறார்: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

By KU BUREAU

சென்னை: அண்ணாமலை வேடிக்கை காட்ட வேண்டும் என்பதற்காக சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. இப்படித்தான் ஆம்ஸ்ட்ராங் விஷயத்தையும் ஊதி பெரிதாக்க நினைத்தார்கள். ஆனால் அந்த கொலை சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அனைத்து விஷயங்களும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டன. அண்ணாமலை வேடிக்கை காட்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்று செய்து கொண்டிருக்கிறார்.

எல்லா அரசியல் தலைவர்களும் முதுகில் அடித்துக் கொள்ள முடியுமா? அரசியல் தலைவர்களுக்கு என போராட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு போராட்டத்தை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார், இது கேலிக்கூத்தாக உள்ளது. புதிய பதவி கிடைக்கும் என்று ஜோதிடர் சொன்னதால் அண்ணாமலை சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்த போது அண்ணாமலை எங்கே சென்றார் என்ன செய்து கொண்டிருந்தார். பொள்ளாச்சி கொடுமை நடந்தபோது போராட்டத்தை மக்கள் நடத்தினார்கள். அப்போது எந்த கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்ணாமலை செய்யும் வேடிக்கைகளில் இதுவும் ஒன்று. அண்ணாமலை செய்வது கேலிக்கூத்தானதாக இருக்கிறது. அண்ணாமலையின் நடவடிக்கையை பாஜகவில் இருக்கும் தொண்டர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE