அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை என்றும், கைதான ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி நேற்று கூறியதாவது: பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு காரணமான ஞானசேகரன், புகார் அளிக்கப்பட்ட 5 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறை உடனே நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ இல்லை. கைது செய்யப்பட்டுள்ளவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது.
கைது செய்யப்பட்டவர் துணை முதல்வருடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருவர் நடந்து வரும்போது புகைப்படம் எடுத்துக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல், அமைச்சர் மா. சுப்ரமணியத்துடன் இருக்கும் புகைப்படம், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏ என்ற அடிப்படையில், ஒரு நிகழ்வுக்கு சென்ற அமைச்சருடன் அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கை மூடிமறைக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை வாங்கி கொடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
» கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
» பாம்பனில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழப்பு
இது பொள்ளாச்சி சம்பவம் போல் இல்லை. அன்று ஒரு முக்கிய பிரமுகரின் மகனே சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததால் ஆட்சியாளர்கள் அதை மூடி மறைக்க முயற்சித்தனர். தற்போதுகூட, ராமேசுவரத்தில் அதிமுக பிரமுகரின் மருமகன் ராஜேஷ் கண்ணா, பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து சிக்கியுள்ளார். இதுபோன்ற தவறுகள் செய்வது அதிமுகவினர்தான். தவறு செய்பவர்களுக்கு திமுகவில் இடமில்லை.
திராவிட மாடல் அரசில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண் உயர்கல்வியை சிதைத்து, பெண்களை வீட்டிலேயே முடக்கும் முயற்சியாகத்தான் எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்குகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. அதேபோல , அதிமுக ஆட்சியில்தான் நிர்மலாதேவி என்ற பேராசிரியரே மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு தள்ள நினைத்த அவலம் நடந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையங்களை அறிவித்து, திறந்து வருகிறார். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது விசாரணையில்தான் தெரியவரும். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தெரியாதவாறு விசாரணை நடத்தப்படும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் எந்த அடையாளமும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டும் என்று எந்த வகையிலும் இந்த அரசு நினைக்கவில்லை, அண்ணா பல்கலைகழக வளாகத்தில் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வந்து சென்ற வழி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.