மதுரையில் பள்ளிவாசல்கள் நிர்வாக அலுவலகத்துக்கு பூட்டுப்போட்ட விவகாரத்தில் உடன்பாடு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் பள்ளிவாசல்கள் நிர்வாக அலுவலகத்துக்கு வக்பு வாரியம் பூட்டு போட்ட விவகாரத்தில் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை தெற்குவாசல், தெற்கு வெளிவீதி பள்ளிவாசல்களின் நிர்வாகத்தை 2022-ல் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் நிர்வகிக்கின்றனர். இவர்கள் பதவிக்காலம் 2025 செப்டம்பரில் முடிகிறது. இருப்பினும், முறைகேடு புகார் தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தை கையகப்படுத்தும் வகையில் வக்பு வாரிய அதிகாரிகள் பூட்டுப்போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத் நிர்வாகிகளும் பதிலுக்கு பூட்டு போட்டனர். இது தொடர்பாக வக்பு வாரியம் கொடுத்த புகாரின்பேரில் தெற்குவாசல் போலீசார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் பள்ளிவாசல் மாடியில் ஏறி ஜமாத்தைச் சேர்ந்த சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகள் கமாலுதீன், அலி அக்பர், முகமது அன்சார், முகமது இஸ்திரி, வழக்கறிஞர் முருக கணேஷ் ஆகியோர் நேற்று கூறியதாவது:

வக்பு வாரிய சட்டப்படி நிர்வாகிகள் 20 பேருக்கு தனித்தனி சம்மன் அனுப்பி விசாரிக்கவில்லை. வக்பு வாரியம் அத்துமீறி கையகப்படுத்தியது குறித்து உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. டிச. 20 நடந்த விசாரணையில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடக்கூடாது என வக்பு வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. பள்ளிவாசல் தரப்பில் இருந்து வக்பு வாரியத்துடன் பேச்சு நடத்த 10 பேர் கொண்ட குழு தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பள்ளிவாசல்கள் நிர்வாக தரப்புடன் வக்பு வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. நிர்வாகத்தை கலைத்து நிர்வாக கணக்குகளை தினமும் பள்ளிவாசல் கணக்காளர் சரிபார்த்து அதை வக்பு வாரியம் நியமித்த சதாம் என்பவரிடம் ஒப்படைக்க வேண்டும். நிர்வாக அலுவலக சாவி சதாமிடம் இருக்க உடன்பாடு ஏற்பட்டது. அடுத்த மாதம் நடக்கும் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு என்ன உத்தரவு வருகிறதோ அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என, பள்ளிவாசல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE