நாகர்கோவில்: குமரி கடலோர பகுதிகளில் இன்று சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி குமரி மாவட்டம் குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, பள்ளம் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 20வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜ் எம்எல்ஏ, எம்ஆர் காந்தி எம்எல்ஏ மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். குளச்சல் அருகே கொட்டில்பாடு சுனாமி காலனியில் இருந்து இன்று காலை பங்குதந்தை ராஜ் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சுனாமியால் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் பொதுமக்கள் மலர்வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். இரவும் அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மணக்குடியில் புனித அந்திரேயர் ஆலயத்தில் சுனாமி நினைவு திருபலி நிகழ்ச்சி பங்கு தந்தை அஜன்சார்லஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர். இதைப்போல் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
» திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன் - அண்ணாமலை சபதம்