மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் அனைத்து தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் முதல் முறையாக திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினந்தோறும் ஒவ்வொரு வண்ணத்தில் உள் நோயாளிகள் படுக்கை விரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் அரசு மருத்துவமனையில் பல லட்சம் செலவு செய்யமுடியாத எழை நோயாளிகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைதான் கடைசி நம்பிக்கையாக திகழ்கிறது. தென் மாவட்டங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து உயர் சிகிச்சைக்கு நோயாளிகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். நோயாளிகள் முழுமையான சிகிச்சைகள் வழங்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், பரிசோதனை கூடங்கள் போன்றவை கட்டி திறக்கப்பட்டுள்ளன.
நோயாளிகள் சிகிச்சைக்காக கோரிப்பாளையம் அருகே அமைந்துள்ள மெயின் கட்டிடம், அண்ணா பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள விபத்து காயம் சிகிச்சை பிரிவு மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிட வார்டுகள் என்று சேர்த்து மொத்த 4,400 படுக்கை எண்ணிக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த படுக்கைகளின் மேல் படுக்கை விரிப்புகளை துவைத்து சுகாதாரமாக தினந்தோறும் மாற்றப்பட வேண்டும். அவ்வாறு போடப்படும் படுக்கை விரிப்புகள், கடந்த காலத்தில் தினந்தோறும் தவறாமல் மாற்றப்படுவதில்லை என்றும், சுகாதாரமாகவும் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
» திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன் - அண்ணாமலை சபதம்
» ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
படுக்கை விரிப்புகள் அழுக்கான நிலையில் நாற்றம் வீசுவதோடு சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. குறிப்பாக விபத்து காயம் சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு, தலைக்காய அறுவை சிகிச்சை பிரிவு, இரத்தநாளம் அறுவை சிகிச்சை பிரிவு, குடல் இரப்பை அறுவை சிகிச்சை பிரிவுகளில் அறுவை சிகிச்சைக்கு பிறகு உள்நோயாளிகளுக்கு ரத்த கசிவு, சிறுநீரக பை பயன்படுத்துதல், நோயாளிகளின் வியர்வை, மருந்து சொட்டுகள், உணவு அருந்துதல் என்று ஓரிரு நாட்களில் படுக்கை விரிப்புகள் அழுக்காகி நாற்றம் வீச ஆரம்பித்துவிடும். அதனால், படுக்கை விரிப்புகள் தினமும் மாற்றப்படுவதில்லை என்றும், வார்டுகளில் சுகாதாரமான சூழ்நிலை நிலவவில்லை என்றும் நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது திங்கிட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரும் ஒரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகளை மாற்றப்படும் புதிய நடைமுறை முதற்கட்டமாக அனைத்து தீவிர சிகிச்சை பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் திங்கட்கிழமை ரோஸ் வண்ணத்திலும், செவ்வாய்க்கிழமை கருநீலம் வண்ணத்திலும் புதன்கிழமை மெருன் வண்ணத்திலும், வியாழக்கிழமை கத்திரிப்பூ வண்ணத்திலும், வெள்ளிக்கிழமை பச்சை வண்ணத்திலும், சனிக்கிழமை நீலம் வண்ணத்திலும், ஞாயிறு சந்தனம் வண்ணத்திலும் தினமும் படுக்கை விரிப்புகள் மாற்றப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் மாற்றப்பட வேண்டிய இந்த வண்ண நிற படுக்கை விரிப்பு விவரம் பட்டியலை ஒவ்வொரு முக்கிய உள்நோயாளிகள் வார்டின் முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் விதமாக வெளிப்படதன்மையோடு வைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு தங்களுக்கு இன்று எந்த நிறத்தில் படுக்கை விரிப்பு போடப்படுகின்றன என்றும், ஒவ்வொரு நாளும் அவை மாற்றப்படுகிறதா? என்றும், மாற்றப்படவில்லை என்றால் மருத்துவ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவதுற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக நோயாளிகள் பெருமிதம் தெரிவித்தனர்.
மதுரை பெண்ணின் சட்டபோராட்டத்தால் சாத்தியமானது
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நோயாளிகளுக்கு படுக்கும் படுக்கை விரிப்புகள் தினந்தோறும் ஒரு நிறத்தில் படுக்கை விரிப்புகள் மாற்றப்படுகின்றன என்பதை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் மூலமும், நேரடியாக சென்றும் மதுரை கே.கே.நகரை சேர்ந்த சுகாதார உரிமை சமூக ஆர்வலர் வெரோணிக்கா மேரி ஆய்வு செய்து கண்டறிந்தார்.
இதையடுத்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையைப் போல் மதுரையிலும் நடைமுறைப்படுத்தி நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் செயல்படுவதுபோல் சிறந்த மற்றும் சுகாதாரமான மருத்துவச்சேவை கிடைக்க அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். அவர்கள் கண்டுகொள்ளாததால் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடர்ந்தார். வெரோனிகா மேரியின் சட்டபோராட்டம் மற்றும் உயர்நீதிமன்றம் அரசு உத்தரவு எதிரோலியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் தற்போது ஒவ்வொரு நிறத்தில் படுக்கை விரிப்புகள் மாற்றப்படும் நடைமுறை வந்துள்ளது.