சென்னை: ஸ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு அவர்களின் பெயரை வைக்க முதல்வர் உத்தரவிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு இன்று (26.12.2024) நூறாவது பிறந்த நாள், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அமைப்பு தின நூற்றாண்டும் இன்று தொடங்குகிறது. இத்துடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னோடியும், தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் கே.டி.கே.தங்கமணியின் 23வது நினைவு நாள். மூன்று நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில மாநிலத் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தலைமையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றிய தமிழக முதல்வர் இரா.நல்லகண்ணு அவர்களின் பொதுவாழ்வு சிறப்புகளை எடுத்துக் கூறினார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், திராவிட இயக்கமும் கொள்கை கூட்டணி கட்சிகள் என்பது மட்டுமல்ல, இது நிரந்தரக் கூட்டணி என்றும் குறிப்பிட்டார்.
விழா பேருரை முடிந்ததும் முதலமைச்சரிடம் இரா.நல்லகண்ணு ஒரு கோரிக்கை மனுவை நேரில் கொடுத்தார். அந்தக் கோரிக்கை மனுவில் ஸ்ரீ வைகுண்டம் அரசு பொது மருத்துவமனையை உயர்ரக மருத்துவமனையாக மாற்றித் தர ஆவன செய்யுமாறு கோரியிருந்தார். இதனையடுத்து “ஸ்ரீ வைகுந்தம் அரசு பொது மருத்துவ மனையில் நவீன மருத்துவக் கருவிகள் அமைப்பதுடன், மருத்துவ மனையின் புதிய கட்டிடத்துக்கு தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு கட்டிடம் என்று பெயரிடப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
» திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன் - அண்ணாமலை சபதம்
» ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சமூகநீதி, ஜனநாயக உரிமைகள், தமிழ்மொழி வளர்ச்சி போன்ற தளங்களில் பணியாற்றிய முன்னோடிகளுக்கு தமிழக அரசு சிறப்பு செய்து, அவர்களது பெருமைகளை எடுத்துக் கூறுவதுடன் எதிர்காலத் தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில் பொது இடங்களுக்கு பெயர் சூட்டி வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. ஸ்ரீவைகுந்தம் அரசு மருத்துவ மனைக்கு இரா.நல்லகண்ணு நூற்றாண்டு கட்டிடம் என்று பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.