பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருகிறோம். வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்ற தயாரா என்று அமைச்சர் சிவசங்கருக்கு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1,000 நாட்களுக்கு மேலாகியும் அதை செயல்படுத்த போலி சமூகநீதி திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, பாமக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் தமிழகத்தை தொடர்ந்து கொள்ளையடிக்கலாம் என்ற திமுகவின் கனவை கலைத்திருக்கிறது.
அதனால் தான் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவகங்கரை ஏவி விட்டு, சமூகநீதிக் காவலர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு எதிராக ஓசையெழுப்ப வைத்திருக்கிறார்கள். ராமதாஸ், அன்புமணி எழுப்பிய வினாக்கள் மிகவும் தெளிவானவை. உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1,000 நாட்களுக்கு மேலாகியும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாதது ஏன். திமுகவில் துரைமுருகன் போன்ற வன்னிய சமூதாயத்தை சேர்ந்த மூத்த அமைச்சருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படாதது ஏன் என்பது தான் அவை. இந்த வினாக்களை புரிந்து கொள்ளாமலேயே சிவசங்கர் சீறி எழுந்திருக்கிறார். தேர்தல் வந்தால் தான் பாமகவுக்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த நினைவு வரும் என்று ஏற்கனவே பலமுறை சொன்னதையே சொல்லியிருக்கிறார்.
சமூகநீதி குறித்து எவ்வளவு தான் பாடம் நடத்தினாலும் திமுகவுக்கும், அதன் தலைமைக்கும் புரியவே மறுக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களின் மக்கள்தொகைக்கு இணையாக அதிக இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு நினைத்தால், அதை மாநில அரசே செய்யலாம். அதற்கு மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. இப்போதும் கூட எங்களுக்கு எந்த தடையும் இல்லை. நாளையே பாஜக கூட்டணியிலிருந்து வெளிவருகிறோம். அன்புமணி கூறியதை போல திமுகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்குகிறோம். அப்படி செய்தால் வரும் 6-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றுமா. இப்போது உள்ள தடைகள் அனைத்தும் பாஜக அணியிலிருந்து பாமக வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா.
» அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக கோவை சத்யன் நியமனம்
» நாடு இருக்கும் நிலையில் இடதுசாரிகள் இணைய வேண்டும்: முத்தரசன் விருப்பம்
பாமகவில் மத்திய அமைச்சர் பதவியும், கட்சி தலைவர் பதவியும் அன்புமணிக்கு மட்டும் தான் வழங்கப்படுமா என்று வினவியுள்ளார் சிவசங்கர். திமுகவில் தான் அண்ணாவுக்கு கூட வழங்கப்படாத தலைவர் பதவி ஸ்டாலினின் குடும்ப சொத்தாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கட்சியில் தலைவர் பதவியை பேராசிரியர் தீரன், அவர் இருக்கும் வரை வகித்தார். அதன்பின் அப்பதவிக்கு வந்த நான் 25 ஆண்டுகள் அப்பதவியை வகித்தேன். அதன்பிறகு தான் அன்புமணிக்கு அந்த பதவி வழங்கப் பட்டிருக்கிறது. இப்போதும்கூட எனக்காகவே கவுரவ தலைவர் பதவி உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், திமுகவில் அப்படியல்ல. சிவசங்கரின் குனிந்த முதுகு சற்று நிமிர்ந்தால் அவரது அமைச்சர் பதவியும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் அவரை விட குனியக்கூடிய இன்னொரு அடிமைக்கு போய்விடும். பாமக என்பது திமுகவை போன்றது அல்ல. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவை கைப்பற்றி கொண்டு தாத்தா, மகன், பெயரன், கொள்ளு பெயரன் என வாழையடி வாழையாக பதவிகளை அனுபவிப்பது திமுகவின் எழுதப்படாத விதி. பாமகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். சிவங்கரை போன்றவைகளை ஏவி விடுவதன் மூலம் பிரச்சினையை திசை திருப்பி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு எனது அனுதாபங்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் சமூக அநீதி கட்சியான திமுகவை மக்கள் வீழ்த்தப்போவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.