செங்குன்றம்: புழல் மத்திய சிறை வளாகத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை- புழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணை பிரிவு, தண்டனை பிரிவு மற்றும் மகளிர் பிரிவு ஆகியவற்றில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் விசாரணை கைதிகள் தவிர்த்து, கொலை, போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றம் மூலம் நீண்ட நாட்கள் சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு, அவர்களை சீர்திருத்தும் நோக்கோடு, தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் பல்வேறு கை தொழில்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன.
இந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற கைதிகள் மூலம் ஆயத்த ஆடைகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. அதே போல், காகித கழிவுகளை மறுசுழற்சி செய்து, அட்டை ஆவண கோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இப்படி தண்டனை கைதிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்காக வெளி சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை சிறை நிர்வாகம் தண்டனை காலம் முடிந்து வெளியில் செல்லும் சிறைவாசிகளின் எதிர்கால நலனுக்காக வழங்கி வருகிறது.
இந்நிலையில், புழல் சிறை வளாகத்தில் காகித கழிவுகளை மறுசுழற்சி செய்து, ஆவணக் கோப்புகள் தயாரிக்கும் கிடங்கின் ஒரு பகுதியில் இன்று பகலில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் தீ மள மளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த காகித கழிவுகள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால், சிறை வளாகம் புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் விரைந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணணத்தனர். இந்த தீ விபத்தின் போது கிடங்குக்குள் ஆவண கோப்புகள் தயாரிக்கும் பணியில் கைதிகள் யாரும் ஈடுபடாததால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள புழல் போலீஸார், மழை காலம் என்பதால் கட்டிடத்தில் உள்ள ஈரப்பதம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதா ? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.