புதுச்சேரி: புதுச்சேரியின் குடிநீருக்கு மரக்காணம் கழுவேலி ஏரி நீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகளிடம் புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளருடன் புதுவை அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்னை சென்று அண்மையில் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் புதுவை அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியன், செயற் பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக புதுச்சேரி அதிகாரிகள் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவையில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முதன்மையான நீர் ஆதாரமாக விளங்கும் நிலத்தடி நீரில் அதிகப்படியான டிடிஎஸ் இருப்பதால் பயனற்றதாக உள்ளது. நிலத்தடி நீர் ஆதாரத்திலிருந்து நதி நீர் ஆதாரத்துக்கு புதுவை மாறுவது அவசர தேவை. புதுவைக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீர் தேவை சுமார் 600 எம்எல்டி. நவம்பர், டிசம்பர் மாதங்களில் சாத்தனூர் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்படுவதால், புதுவையில் உள்ள கிராமங்கள் ஆண்டுதோறும் வெள்ளத்தில் சூழ்ந்து பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
» அஜித்தின் ‘விடாமுயற்சி’ முதல் சிங்கிள் - டிசம்பர் 27ல் வெளியாகியது!
» ரஜினிக்கு ‘தளபதி’, சூர்யாவுக்கு ‘ரெட்ரோ’... - டைட்டில் டீசர் எப்படி?
பெஞ்சல் புயலாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நீரை சேமித்து பருவமழைக்கு முன்பு திறந்துவிட வேண்டும். தமிழ்நாடு நீர்வளத் துறை மற்றும் புதுவை பொதுப்பணி துறைக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தபடி ஆண்டுதோறும் 7 மாதம் 2 ஆயிரம் கன அடி, 2 மாதம் ஆயிரத்து 500 கனஅடி என மொத்தம் 44.70 டிஎம்சி திறந்துவிட வேண்டும்.
புதுவை, தமிழகத்துக்கு முறையே 10:3 என்ற விகிதத்தில் 6 ஆயிரத்து 53 ஏக்கருக்கு விவசாயம், குடிநீர் தேவைக்கு 7.80 டிஎம்சி, ஆவியாதல், நீர் இழப்பு சேர்த்து 11.70 டிஎம்சி தண்ணீர் விடுவிடுக்க வேண்டும். புதுவையில் நிலவும் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க சாத்தனூர் அணையில் இருந்து குழாய் மூலம் 1.50 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
மரக்காணம் கழுவேலி ஏரியில் இருந்து ஆண்டுதோறும் வீணாக கடலுக்கு செல்லும் நீரை புதுவை அரசின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வரும்காலத்தில் வெள்ள பாதிப்பிலிருந்து மீள மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் வெள்ள மேலாண்மை திட்டத்தில் மாநில அரசு பங்களிப்பை தமிழகம், புதுவை அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதன்படி, சொர்ணாவூரில் ஏற்கனவே உள்ள தடுப்பு அணை பெஞ்சால் புயலால் சேதமடைந்துள்ளது, எனவே சொர்ணாவூரில் தற்போதுள்ள தடுப்பு அணையை பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை அரசாங்கத்தின் குழுவுடன் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. பழுது நீக்கும் செலவான சுமார் ரூ.44 கோடியை ஒப்பந்தத்தின்படி புதுச்சேரி அரசு தர வேண்டியதை நிறுத்தி வைக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது. வீடூர் அணையின் பழுது மற்றும் சீரமைப்புச் செலவு நிலுவைத் தொகையான சுமார் ரூபாய் 1.20 கோடியை தமிழக அரசுக்கு புதுச்சேரி அரசு வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.